தமிழக சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும் நிகழ்வை தொடங்கியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேம்பு மாரியம்மன் கோவில் தெரு, சர்ச் கார்னர், பசுபதிபாளையம், திருமாநிலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது அப்பகுதி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் வருகையை முன்னிட்டு பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மேலும், பொன்னாடை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பெண்கள், இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் அவரை வரவேற்றனர்.
நிகழ்ச்சியின் போது பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், “தமிழகத்தில் வீசிய அரசியல் புயலுக்கு மத்தியிலும் என்னை நம்பி வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த கரூர் மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கரூர் தொகுதி தமிழக அரசியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தொகுதியாக இருந்தது. அந்த சூழ்நிலையிலும் எனக்கு வெற்றியை அளித்த மக்களின் நம்பிக்கையை என்றும் காப்பாற்றுவேன்” என்று தெரிவித்தார்.
மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், கரூர் தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த நன்றி தெரிவிக்கும் பயணம் கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த நேரடி நன்றி தெரிவிக்கும் நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
