புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து பற்றி எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை சேர்ந்த 6 பேர் காரில் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் நடைபெற்ற திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்று கொண்டிருந்த கார் ஏம்பல் அருகே சென்று கொண்டிருந்த போது அதீத வெப்பம் காரணமாக கார் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
எனினும் சாலையில் சென்று கொண்டிருந்த போதே திடீரென தீ பிடித்த குறிப்பிட்ட காரிலிருந்த 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஏம்பல் கிராமத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சென்ற போது எதிர்பாராவிதமாக 6 பேர் சென்று கொண்டிருந்த காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பி உள்ளது.
இதனை தொடர்ந்து அந்த காரில் சென்ற 6 பேரும் உடனடியாக சுதாரித்து கொண்டுள்ளனர். சாலையில் சென்று கொண்டிருந்த காரை உடனடியாக ஓரம்கட்டி நிறுத்திய கார் டிரைவர், மற்றவர்களையும் கீழே உடனடியாக இறங்க சொல்லி விட்டு தானும் கீழே இறங்கி உள்ளார். பின்னர் காரில் இருந்து கீழே இறங்கிய அனைவரும் சற்று தள்ளி காரை விட்டு பாதுகாப்பான தூரம் சென்றனர். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த புகையானது தீயாக மாறி மளமளவென கார் முழுவதும் பரவி எரிய துவங்கியது. தாங்கள் வந்த கார் தங்கள் கண் முன்னே முழுவதுமாக தீப்பற்றி எரிய துவங்கியதை பார்த்த 6 பேரும் செய்வதறியாது அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கடுமையாக பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். எனினும் தீ பிடித்த கார் அதற்குள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. காரில் பயணித்த 6 பேரும் சரியான நேரத்தில் கீழே இறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்ததும் காரில் இருந்தவர்கள் முன்கூட்டியே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனிடையே இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
