அமெரிக்க அதிபராக கடந்த 20ம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். புளோரிடாவில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வாஷிங்டனுக்கு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது டிரம்ப் கூறுகையில், ‘மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது’ என்றார். முன்னதாக டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார். ஏற்கனவே டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்திருந்தார்.
டிரம்ப்க்கும், மோடிக்கும் இடையே நல்ல நட்புறவு இருப்பதால் மோடி அடுத்த மாதம் அமெரிக்க செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.