டெல்லி : அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நடவடிக்கை எரிபொருள் சேமிப்பு மற்றும் நிதி ஒழுக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.பிரதமரின் பாதுகாப்புப் பணியை மேற்பார்வையிடும் சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG)க்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் கான்வாயில் உள்ள வாகனங்களை கணிசமாகக் குறைக்கவும், மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை அதிகரிக்கவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், புதிய வாகனங்கள் எதையும் வாங்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.இந்த உத்தரவு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் உரையாற்றிய பிறகு குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு மோடி மேற்கொண்ட உள்நாட்டுப் பயணங்களின்போது கான்வாய் அளவு குறைக்கப்பட்டது.சமீபத்தில் பிரதமர் மோடி பொதுமக்களுக்கு ஏழு முக்கிய ஒழுக்க நடவடிக்கை வேண்டுகோள்களை விடுத்திருந்தார்.
அதில் பெட்ரோல்-டீசல் பயன்பாட்டைக் குறைக்க பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துதல், ஒரு வருடத்துக்கு தங்கம் வாங்காமல் இருத்தல், வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்தல் உள்ளிட்டவை அடங்கும்.இந்த வேண்டுகோளுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பலரும் முன்வந்துள்ளனர்.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமரின் இந்த முக்கிய வேண்டுகோளை நடைமுறைப்படுத்தும் வகையில் அரசுத் துறை வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நானும் எனது அமைச்சரவை சகாக்களும், பாஜக எம்எல்ஏக்கள், பொதுப் பிரதிநிதிகள், அதிகாரிகள் அனைவரும் குறைந்த வாகனங்களைப் பயன்படுத்தி, கார் பூலிங் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி பொதுமக்களுக்கு எரிபொருள் சேமிப்புக்கு வேண்டுகோள் விடுத்த அதே நேரத்தில், தனது அலுவல் கான்வாயிலும் கடுமையான ஒழுக்க நடவடிக்கையை அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
