திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த ஆட்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் டவுன் பஸ் பயணிகளுடன் ஸ்ரீரங்கம் பஸ் நிலையத்துக்குள் நுழைந்தது. அப்போது எதிர்பாராத விதமாகப் பஸ் நிலையத்துக்குள் இருந்த மின்கம்பத்தில் அந்தப் பஸ் மோதியது. இதில் மின் கம்ப மேடை மற்றும் எல்இடி விளக்கு நொறுங்கியது.
இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்தப் பஸ் வழக்கம் போல் மீண்டும் பஞ்சப்பூர் பஸ் நிலையத்துக்குப் பயணிகளுடன் புறப்பட்டது.

இது பற்றி அறிந்த மாநகராட்சி உதவி பொறியாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தனியார் பஸ் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு இழப்பீடு கேட்டுள்ளார்
ஆனால் அதற்கு அலட்சியமான பதில் கிடைத்தது.
இதை யடுத்து இன்று காலை ஜெயக்குமார் மாநகராட்சி ஊழியர்களுடன் விபத்தை ஏற்படுத்தி இழப்பீடு வழங்காத அந்தத் தனியார் பஸ்சை சிறை பிடித்தார். இன்று காலை பயணிகளுடன்

பஞ்சப்பூர் நோக்கி புறப்பட்ட அந்தப் பஸ்ஸை பஸ் நிலையத்துக்கு வெளியே அவர்கள் வழிமறித்துத் தடுத்து நிறுத்தினர். இழப்பீடு வழங்கிய பின்னர்தான் பஸ்சை இயக்க வேண்டும் என உறுதிப்படத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து வேறு வழி இல்லாமல் பயணிகள் இறக்கி

விடப்பட்டனர். பின்னர்த் தகவல் அறிந்த காவல்துறையினர் மாநகராட்சி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சிறை பிடிப்புப் போராட்டம் ஸ்ரீரங்கம் பஸ் நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
