பந்தலூர்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பேட்டையை சேர்ந்தவர் அப்பு (32). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருப்பூரில் தங்கி வேலை செய்தார். அதே கம்பெனியில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண் பணியாற்றி உள்ளார். அப்போது அப்புவும் அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. குடும்பத்துடன் மனைவியின் பெற்றோர் வீட்டில் தங்கினர்.
அப்போது தாத்தா, பாட்டியிடம் வளர்ந்த பந்தலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 22-4-2022-ம் ஆண்டு அப்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து அப்புவை கைது செய்தனர். ஊட்டி மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், நீதிபதி செந்தில்குமார் நேற்று தீர்ப்பளித்தார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அப்புவிற்கு ஆயுள் இறுதிவரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசிடம் இருந்து ரூ.5 லட்சம் நிவாரண தொகை பெற்று வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
