Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மளிகைக் கடை பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் அபேஸ்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள காவலப்பட்டியைச் சேர்ந்த சபரிநாதன் (35), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சபரிநாதன், கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து இந்தப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும், அதே பகுதியில் உள்ள காளிதாஸ் மற்றும் சுப்பிரமணி ஆகியோரது மளிகைக் கடைகளின் பூட்டுகளையும் உடைத்து அந்த கும்பல் திருட முயன்றுள்ளது. எனினும், அந்தக் கடைகளில் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இந்தக் கடைகளில் பொருட்கள் ஏதேனும் திருடுபோயுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சபரிநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் பழநி தாலுகா போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளைச் சேகரித்துள்ள போலீஸார், அதன் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அடுத்தடுத்து மூன்று கடைகளில் திருட்டு முயற்சி நடந்துள்ள சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!