தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் அறிவிப்புகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திருச்சியில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார். பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் 117 ஆண் வேட்பாளர்களும், 117 பெண் வேட்பாளர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இம்முறை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் தொண்டர்களிடையே பேசிய சீமான், இந்திய துணைக்கண்டத்திலேயே எந்த ஒரு கட்சியுடனும் சமரசம் செய்யாமல், சீட்டுக்காகவோ அல்லது பணத்திற்காகவோ பேரம் பேசாமல் ஐந்தாவது முறையாகத் தனித்து களம் காணும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இது ரசிகர் கூட்டம் அல்ல, லட்சியக் கூட்டம் என்று குறிப்பிட்ட அவர், திரைக்கவர்ச்சியை விட இன எழுச்சியே முக்கியமானது என்றும், தமிழ் இனத்தின் நலனுக்காகவும் அரசியல் விடுதலைக்காகவுமே தாம் தேர்தலில் நிற்பதாகவும் ஆவேசமாகப் பேசினார்.
மேலும், அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலை குறித்துப் பேசிய அவர், 5 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டும் தாய்மார்கள் கையில் 2 லட்சம் ரூபாய் கடன் இருப்பதை அறிவுச் சமூகம் உணர வேண்டும் என்றும், மக்கள் இதைச் சிந்திக்கத் தொடங்கினால் மாற்றத்திற்கான அரசியல் தொடங்கிவிடும் என்றும் தெரிவித்தார். அடிபட்ட புலியும், அடிமைப்பட்ட இனமும் மீண்டும் எழுந்து நிற்கும் காலம் இது என்று முழங்கிய அவர், 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனது தனித்துவமான தத்துவத்துடன் வெற்றியை நோக்கிப் பயணிக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

