தூத்துக்குடி: திரேஸ்புரம் அருகே மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இரவு திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தின் வடக்கு வாடைப் பகுதியில் ஒரு ஃபைபர் படகில் சிலர் பொருட்களை ஏற்றிக் கொண்டிருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.போலீசார் அங்கு விரைந்ததும், கடத்தல்காரர்கள் இருட்டைப் பயன்படுத்தி தப்பி ஓடினர். பின்னர், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பதிவு எண் இல்லாத இரண்டு என்ஜின்கள் பொருத்தப்பட்ட அதிவேக ஃபைபர் படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இலங்கைக்கு கடத்துவதற்காக 5 அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 1200 சோப்புகளை பறிமுதல் செய்தனர். இந்த சோப்புகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய கடத்தல்காரர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் படகு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
