Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்- காட்டுப்பன்றியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சிறப்பு குழு

காட்டுப்பன்றியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சிறப்பு குழு

அரியலூர் : அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வனத்துறையின் சார்பில் உயிரிப் பல்வகைமை மேலாண்மைக்குழுக் கூட்டம், தமிழ்நாடு ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, காட்டுப்பன்றிகளால் விவசாயம் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு மனித வன உயிரின முரண்களை தவிர்ப்பது மற்றும் நாட்டு வெடிமருந்து, அவுட்டுக்காய் மற்றும் மின்சாரம் தாக்கி வன உயிர்கள் இறப்பதை தடுத்தல் தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உயிரிப்பல்வகைமை சட்டம் மற்றும் உயிரிப்பல்வகைமை விதிகளின்படி உயிரிப்பல்வகைமை மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி உயிரிப்பல்வகை மேலாண்மைக் குழுவின் நடவடிக்கை விபரங்கள், நிதி ஒதுக்கீடு, பல்லுயிர் சார்ந்த தயாரிப்புகளை ஊக்குவித்தல், இணையவழி விற்பனையை எளிதாக்குதல், சந்தைபடுத்துதல் முறைகள் தொடர்பாகவும், உயிர் வளங்கள் மற்றும் சுற்றுசூழல் மறு சீரமைப்பு, அரிய வகை தாவரங்கள், உயிரினங்களை பாதுகாத்தல், உயிர் வளங்களை தொடர்ந்து கண்காணித்தல், மாவட்ட, வட்டார, கிராம அளவிலான குழுக்களுக்கு உயிர்ப்பல்வகைமை மேலாண்மை தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள பயிற்சி குறித்தும், தொன்மை வாய்ந்த ஸ்தல விருட்ச மரங்களை அடையாளம் கண்டு அவற்றை மீட்டெடுத்து பாதுகாத்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, ராம்சார் தளமான கரைவெட்டி ஈர நிலப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மேம்படுத்துவது தொடர்பாகவும், ஈர நிலத்தின் பரப்பளவு, நீர்வரத்து,  நீர் வெளியேற்ற கால்வாய்கள் பராமரிப்பது குறித்தும், திடக்கழிவு மேலாண்மை கழிவு நீர் வெளியேற்றம் மற்றும் ஈர நில பாதுகாப்பு நடவடிக்கைகள், ஈர நிலத்தை ஒட்டியுள்ள விவசாய நடவடிக்கைகள் மற்றும் வேளாண் உள்ளீடுகளின் பயன்பாடுகள் குறித்தும், குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் தொடர்பான விவரங்கள் குறித்தும், சாலை, பாலம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் மின் உட்கட்டமைப்பு தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளபட்டது.

அதனைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு மாவட்ட அளவிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நடமாடுவதற்கான காரணங்களை கண்டறிவது குறித்தும், இழப்பீடு தொகை வழங்குதல், காட்டுப்பன்றி நடமாட்டத்தை கட்டுபடுத்த தேவையான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், வன எல்லைப்பகுதியில் வன விலங்குகளை ஈர்க்காத வகையிலான மாற்றுப்பயிர்களை பயிரிட விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்குதல் தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், நாட்டு வெடிமருந்து, அவுட்டுக்காய் மற்றும் மின்சாரம் தாக்கி வன உயிரினங்கள் இறப்பதை தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், வன உயிரினங்களை இறைச்சிக்காக கொல்லும் திறன் கொண்ட வெடிப்பொருட்களை தயாரித்தலை தடுத்தல், விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பதால் ஏற்படும் வன உயிரினங்கள் இறப்புகளை தடுத்தல் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!