Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேற்கு வங்கத்தில் விநோதம்: ஓட்டுப்போட வந்த ரன்-அவே மனைவியைப் பொறிவைத்து பிடித்த கணவர்

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலின் போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆண் நண்பருடன் ஓடிப்போன தனது மனைவியைப் பிடிப்பதற்காக, அவரது கணவர் வாக்குச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருந்து கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள மதிகாரா-நக்சல்பாரி தொகுதியின் தாராபாரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு கடந்த 23-ம் தேதி காலை ஒருவர் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். ஆனால், அவர் வீட்டிற்குத் திரும்பாமல் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிக்கு வெளியிலேயே நீண்ட நேரம் காத்திருந்தார்.

பிற்பகல் 2:00 மணி அளவில் ஒரு பெண் ஓட்டளிக்க வந்தபோது, மறைந்திருந்த அந்த நபர் திடீரென அப்பெண்ணைப் பிடித்து வாக்குவாதம் செய்து தடுத்து நிறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிடவே, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மத்தியப் படையினர் அந்த நபரைத் தடுத்து நிறுத்தி, பெண்ணைப் பாதுகாப்புடன் ஓட்டளிக்க வைத்து அனுப்பி வைத்தனர்.

வாக்குச்சாவடியில் குழப்பம் விளைவித்த அந்த நபரைப் பிடித்துப் போலீசார் விசாரித்தபோது ஆச்சரியமான தகவல் வெளியானது. அந்தப் பெண் அவரது மனைவி என்பதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆண் நண்பருடன் அவர் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. தனது மனைவி எங்கு இருக்கிறார் என்பதைத் தேடி வந்த கணவர், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது தனது மனைவியின் பெயரைச் சேர்க்கச் செய்துள்ளார். தேர்தல் அன்று அவர் நிச்சயம் ஓட்டளிக்க வருவார் என்று கணித்த கணவர், திட்டமிட்டபடி அங்கு காத்திருந்து அவரைப் பிடித்துள்ளார்.

இருப்பினும், போலீஸ் பாதுகாப்புடன் தனது வாக்கைப் பதிவு செய்த அந்தப் பெண், மீண்டும் தனது ஆண் நண்பருடனேயே சென்றுவிட்டார். தேர்தல் நாளன்று மனைவியைப் பிடிக்கக் கணவர் போட்ட இந்தத் திட்டம் மேற்கு வங்கத்தில் பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!