சென்னையில் அடுத்தடுத்து பழிவாங்கும் படுகொலைகள் நடந்து வருவதால் ‘ரவுடிகள் டிரைவ்’ என்ற பெயரில் கொலை உள்ளிட்ட குற்றப்பின்னணியில் உள்ள 185 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக அடுத்தடுத்து படுகொலைகள் நடந்து வருகிறது. குறிப்பாக பெசன்ட் நகர் பகுதியில் தவெக பிரமுகரும் ரவுடியுமான கண்ணன் என்பவரை மாமூல் வசூலிப்பதில் ஏற்பட்ட முன்விரோத படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் 5 பேர் கொண்ட கும்பல் பொதுமக்கள் முன்னியில் வெட்டி படுகொலை செய்தனர். அதை போல், கந்துவட்டி கும்பல் ஒன்று திருவொற்றியூர் பகுதியில் துணை நடிகர் பிரதீப் ராஜ் என்பவரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்தனர். இந்த 2 படுகொலைகளும் பல நட்கள் திட்டமிட்டு ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
அதேநேரம் திருவொற்றியூரில் துணை நடிகர் பிரதீப் ராஜ் படுகொலையில் திருவொற்றியூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பின்னணியில் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவரிடம் உயர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் சென்னை மாநகர காவல் எல்லையில் நடந்து வரும் பழிவாங்கும் கொலைகள் அதிகரித்துள்ளதால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஏ பிளஸ், ஏ மற்றும் பி கேட்டகிரி ரவுடிகளின் பட்டியலை வைத்து சென்னை முழுவதும் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி ‘ரவுடிகள் டிரைவ்’ என்ற பெயரில் சென்னையில் உள்ள 105 காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு கண்காணிப்பில் உள்ள ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், சென்னை ஏ பிளஸ், ஏ மற்றும் பி கேட்டகிரி ரவுடிகள் மற்றும் சி கேட்டகிரி ரவுடிகள் என மொத்தம் நேற்று ஒரே நாளில் 185 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக தி.நகர் காவல் மாவட்டத்தில் 23 ரவுடிகள், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 21 ரவுடிகள், அடையார் காவல் மாவட்டத்தில் 17 ரவுடிகள் என மொத்தம் 185 ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
