Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூர்யவன்ஷி அசுர வேட்டை: 28 பந்துகளில் 97 ரன்கள் விளாசல்; ஐதராபாத் அணிக்கு 244 ரன்கள் இமாலய இலக்கு

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் தற்போது தொடங்கி உள்ள வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால்-சூர்யவன்ஷி களமிறங்கினர்.
ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டத் தொடங்கிய வைபவ் சூர்யவன்ஷி, 16 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார். ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் அவர் சிதறடித்தார். பேட் கம்மின்ஸ் வீசிய 3-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார்.
மேலும், ஒரு ஐ.பி.எல். சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை(59 சிக்ஸர்கள்) சூர்யவன்ஷி இன்று முறியடித்துள்ளார். சூர்யவன்ஷியின் அதிரடியால் ராஜஸ்தான் அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 100 ரன்களை நோக்கி சூர்யவன்ஷி முன்னேறினார். ஐ.பி.எல். தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனைக்கு கிறிஸ் கெயில் (30 பந்துகள்) சொந்தக்காரராக இருந்து வருகிறார். இந்நிலையில், சூர்யவன்ஷி 28 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்தார். கிறிஸ் கெயிலின் சாதனையை சூர்யவன்ஷி முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரபுல் ஹின்ஜ் வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் சாதனை படைக்கும் வாய்ப்பை சூர்யவன்ஷி நூலிழையில் தவறவிட்டார்.
அதைத் தொடர்ந்து துருவ் ஜுரேல் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்நிலையில், அவர் 50 ரன்களில் கேட்ச் ஆனார். கேப்டன் ரியான் பராக் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஐதரபாத் அணி 244 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

error: Content is protected !!