வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகரில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு நோக்கி நேற்று மாலை 143 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 152 பேருடன் புறப்பட்ட வியட்ஜெட் பயணிகள் விமானம் நடுவானில் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் தீடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
இயந்திர கோளாறை தகுந்த நேரத்தில் கண்டறிந்த விமானிகள் அருகில் இருந்த சென்னை விமான நிலையத்திற்கு அவசரமாக தரையிறக்க முடிவு செய்தனர்.இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் அவசர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இரவு 10:40 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர், விமான பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டது. இயந்திர கோளாறு சரி செய்தபின் இன்று விமானம் மீண்டும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது.
விமானிகள் தகுந்த நேரத்தில் இயந்திர கோளாறை கண்டுபிடித்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமான இயந்திர கோளாறு ஏற்பட்டு தரையிறக்கப்பட்ட சம்பவம் நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
