மேகதாது அணை விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு சென்னை விமான நிலையத்தில் பேட்டி
சென்னை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
நிதிநிலை அறிக்கையில் தங்கள் துறை சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இன்று மாலை 3 மணிக்கு அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. எங்களுடைய துறை சார்பில் நிறைய கோரிக்கைகள் உள்ளன. அவற்றை ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். இன்றைய கூட்டத்தில் அது தொடர்பாக முடிவு எடுத்து அறிவிப்பார்கள். சமூக நீதித்துறை சார்பில் நல்ல முடிவாகவும், நல்ல பட்ஜெட்டாகவும் அது அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு தெளிவானது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தை திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்துள்ளன. சட்டப்பேரவையில் அந்தத் தீர்மானத்தை ஆதரித்ததுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. இதில் புதிதாக என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
இதை வைத்து ஏதாவது அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அந்த நினைப்பு தவறாகத்தான் போகும். சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. அதுதான் சரியான நிலைப்பாடாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
மேகதாது விவகாரத்தில் நடவடிக்கைகள் சிதம்பர ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அணை கட்டக் கூடாது என்றால் அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் கூறப்படுவது குறித்த கேள்விக்கு,
சட்டப்பேரவையில் இதுதொடர்பான தீர்மானத்தை திமுகவும் ஆதரித்துள்ளது என்றும், அனைத்து கட்சிகளுமே ஆதரித்துள்ளன. முன்னுக்குப் பின் முரணாக அல்லது முன்னுக்குப் பின்னான செய்திகள் இருந்தால் அதுகுறித்து பேசலாம். மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாடுதான் தொடர்ந்து வருகிறது. இதில் என்ன ரகசியம் என்று தனக்குத் தெரியவில்லை என்றார்.
