வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது, அவர்கள் பயணித்த சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ரஞ்சித்குமார் (23) சுற்றுலா வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 13-க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் ரஞ்சித்குமார் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்தில் இருந்த பர்னிச்சர் கடை மற்றும் மின்கம்பத்தில் மோதி, அருகிலிருந்த பிரியாணி கடைக்குள் புகுந்து நின்றது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்தவர்களில் 5 பேர் லேசான காயமடைந்தனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பர்னிச்சர் கடையின் முன்புறத்தில் வைக்கப்பட்டிருந்த சோபா செட்கள் சேதமடைந்ததுடன், மின்கம்பமும் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
