ஓசூர் அருகே சூளகிரி எலசேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிரத்னா (28) என்பவர் தனது கைப்பையில் 38 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு பேரிகை பகுதியிலிருந்து அரசு பஸ்ஸில் சூளகிரிக்கு வந்துள்ளார். சூளகிரி பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸில் இருந்து இறங்கிய அவர், தான் கொண்டு வந்த பணப்பையை ஞாபக மறதியில் இருக்கையிலே விட்டு விட்டு சென்றுள்ளார்.
சூளகிரி பஜார் தெருவை சேர்ந்த ஜோஸ்வின் (50) என்ற பெண், பஸ் ஸ்டாண்டில் நின்ற அந்த அரசு பஸ்ஸில் ஏறி இருக்கையில் அமர்ந்தபோது அங்கு இருந்த கைப்பையை திறந்து பார்த்துள்ளார் அப்போது அந்த கைப்பைக்குள் 500 ரூபாய் நோட்டுகளாக பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜோஸ்வின் கைப்பையுடன் அந்த பணத்தை சூளகிரி போலீஸ் ஸ்டேஷன் சென்று போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். போலீசார் கைப்பையை சோதனை செய்து அதில் இருந்த செல்போன் எண் மற்றும் படத்தை வைத்து பணத்தை பஸ்ஸில் தவறவிட்ட முனிரத்னாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தனர்.
பணத்தை தவறவிட்ட முனிரத்னா பல்வேறு இடங்களில் பணத்தை தேடி பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் அழைத்ததின் பேரில் அவர் சூளகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றபோது போலீசார் நடந்த விஷயங்களை கூறி அவர் பஸ்ஸில் தவறவிட்ட பணத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளனர். பணத்தை பாதுகாப்பாக எடுத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்த பெண்ணை போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர். அவருக்கு முனிரத்னாவும் நன்றி தெரிவித்தார்.
