டெல்லியின் ஜனக்புரி பகுதியில் நேற்று இரவு யுவராஜ் சிங் (25) என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்திற்கு அடியில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் (Delhi Jal Board) சார்பில் தண்ணீர் குழாய் பதிப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக சாலையில் ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.
வழக்கமான பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பள்ளத்தைச் சுற்றி எச்சரிக்கை பலகைகளோ, தடுப்புகளோ அல்லது இரவு நேரத்தில் தெரியும் வகையிலான விளக்குகளோ வைக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் இருட்டில் பள்ளம் இருப்பதை அறியாத யுவராஜ் சிங், தனது பைக்கோடு அந்தப் பள்ளத்திற்குள் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் (FIR) அறிக்கையிலும், விபத்து நடந்த இடத்தில் எச்சரிக்கை பலகைகள் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, ஜல் போர்டைச் சேர்ந்த நிர்வாகப் பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் ஆகிய 3 பேரை அரசு அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது. ஏற்கனவே நொய்டாவில் இதேபோன்ற விபத்தில் ஒரு பொறியாளர் பலியான நிலையில், தற்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

