வாலிபர் தற்கொலை.. பரிதாபம்
திருச்சி அரியமங்கலம் அடைக்கல மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் தேவ சகாயம் இவரது மகன் ஆபிரகாம் லிங்கன் ( 21). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வீட்டுக்கு சரியாக பணம் தராமல் இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் ஆபிரகாம் லிங்கனை கேட்டுள்ளனர். இதனால் வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். பிறகு தனது நண்பருக்கு செல்போனில் தனக்கு வாழ விரும்பவில்லை என்று கூறி குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். பிறகு உள் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஆபிரகாம் லிங்கன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தேவசகாயம் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆபிரகாம் லிங்கன் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபிரகாம் லிங்கன் இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழைநீர் வடிகால் வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் உடல்
திருச்சி தீரன்நகர் திருச்சி – திண்டுக்கல் பிரதான சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை ஒட்டி சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் உள்ளது.இந்த வாய்க்காலில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.இதனைப் பார்த்து அதிர்ச்சிடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மழைநீர் வடிகாலில் பிணமாக கிடந்தவரை மீட்டனர்.பிறகு உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கிடங்கிற்கு
அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்
இறந்த நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் வாய்காலில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர். இறந்த நபர் சட்டை அணியாமல் டவுசர் மட்டும் அணிந்துள்ளார். இறந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் திறந்த வெளியில் இருக்கும் இந்த மழைநீர் வடிகால் வாய்க்காலை மூட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சியில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் 2 பேர் திடீர் சாவு
திருச்சி கண்டோமென்ட் பாரதியார் சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் ராகேஷ் (வயது 21) இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாத காலமாக மன உளைச்சலில் இருந்த ராகேஷ் நேற்று முன் தினம் இரவு வீட்டில் தனது தாயுடன் பேசிவிட்டு அறைக்கு சென்று தூங்கினார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராகேஷ் கண் விழிக்காத காரணத்தால் தாய் மல்லிகா அருகில் சென்று அவரை எழுப்ப முயன்றார். நீண்ட நேரமாக ராகேஷ்சை எழுப்பியும் அவர் எழவில்லை.
இதையடுத்து அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் ராகேஷ் இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து தாய் மல்லிகா செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராகேஷ் இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவன் தற்கொலை
இதே போன்று திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் இவரது மகன் விஷ்ணு ஜெகன் (13) இவர் திருச்சியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று வந்த விஷ்ணு ஜெகன் வீட்டு பாடத்தை முடிக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து விஷ்ணு ஜெகனை குடும்பத்தினர் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட விஷ்ணு ஜெகன் தனது வீட்டில் உள்ள குளியலறையில் ஒரு துண்டை கொண்டு ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
பிறகு இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த குடும்பத்தினர் விஷ்ணு ஜெகனை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் குழுவினர் அவரை பரிசோதனை செய்து பார்த்து விட்டு விஷ்ணு ஜெகன் இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசில் குமரேசன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
