Skip to content

சபரிமலை தங்க திருட்டு வழக்கில் 2 மணி நேர விசாரணை- நடிகர் ஜெயராமின் வாக்குமூலம் என்ன?

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் என்ன மாதிரியான தகவல்களை தெரிவித்தார் என்பதை பார்ப்போம். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசியபோது 4.5 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதாவது 42.8 கிலோ எடை இருந்த தங்கம், சென்னையில் செப்பனிடப்பட்டு திரும்ப ஒப்படைக்கும் போது 38 கிலோவாக குறைந்தது.

இதுதொடர்பாக அம்மாநில கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

தங்க முலாம் பூசும் செலவு
மேலும் தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற, கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

செப்பனிடும் பணி
இந்த விசாரணையின் போதுதான் செப்பனிடும் பணிக்காக தங்கக் கவசம் எடுத்து வரப்பட்ட போது சென்னை அசோக் நகரில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் வைத்து பூஜை செய்ததற்கான ஆதாரமும் அது குறித்த வீடியோவும் சிக்கியது.

10 மணி நேரம் விசாரணை
இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உன்னிகிருஷ்ணனிடம் 10 மணி நேரம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய பின்னர் அவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தது. புகாரின்பேரில் உன்னி கிருஷ்ணன் போத்தி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயராமிடம் 2 மணி நேரம் விசாரணை
இந்த நிலையில் சபரிமலை தங்கத் திருட்டு விவகாரத்தில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். சென்னையில் உள்ள ஜெயராமின் வீட்டில் வைத்து நேற்று 2 மணி நேரம் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

உன்னியை 40 ஆண்டுகளாக தெரியும்
அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், நான் 40 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்று வருகிறேன். இதனால் கோவிலின் முக்கிய பிரமுகராக செயல்பட்டு வந்த உன்னி கிருஷ்ணன் போத்தியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

திருட்டு நகைனு தெரியாது
துவாரபாலகர் சிலைகள், கோயில் கருவறை கதவுகளில் இருந்த தங்கக் கவசங்களை சீரமைத்து மெருக்கேற்ற சென்னைக்கு எடுத்து வந்துள்ளதாக உன்னிகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். மேலும் “அந்த நகைகளை உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்” என்றும் கூறியிருந்தார்.

நம்பியதால் வந்த வினை
அவரது பேச்சை நம்பி எங்கள் வீட்டில் பூஜை செய்தோம். ஆனால் அது திருட்டு நகைகள் என எனக்கு தெரியாது. சபரிமலைக்குச் சென்று வந்த பழக்கத்தால் அவரை நம்பினேன். இந்த பூஜைக்காக அவருக்கு நான் பணம் எதுவும் தரவில்லை. ஐயப்பன் கோயில் கருவறைக்கு சென்று வழிபட அவர் எனக்கு உதவி செய்தார்.

நிதி பரிவர்த்தனைகள் நடக்கவில்லை
மற்றபடி நகைத் திருட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை . மகரவிளக்கு பூஜையின் போதுதான் அவர் எனக்கு அறிமுகமானார். ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவனத்தில் நடத்தப்பட்ட பூஜைக்கு உன்னிகிருஷ்ணன் அழைப்பின் பேரில் நான் சென்றேன். அவருக்கும் எனக்கும் எந்தவித நிதி பரிவர்த்தனைகளும் இல்லை. இவ்வாறு ஜெயராம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

error: Content is protected !!