Skip to content

17 வயது சிறுவன் ஓட்டிய பென்ஸ் கார் மோதி 3 பேர் படுகாயம்

மராட்டிய மாநிலம் மும்பையில் 17 வயது சிறுவன் ஓட்டிய பென்ஸ் சொகுசு கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டி உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு மும்பையின் அக்ரிபடா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் 18 வயது பேத்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது 17 வயது நண்பனுடன் தாத்தாவின் பென்ஸ் சொகுசு காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது உரிமம் இல்லாத அந்தச் சிறுவன் காரை ஓட்டியுள்ளார். தெற்கு மும்பையில் உள்ள டிஎம் மர்க் கடற்கரை சாலை சுரங்கப்பாதையில் கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்தச் சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றொரு காரின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு மூதாட்டி உட்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுவன் அதிவேகமாக காரை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், உரிமம் இல்லாத சிறுவனிடம் காரைக் கொடுத்தது மற்றும் விபத்து ஏற்படுத்தியது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!