Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போட்டோ சூட் எடுக்க சென்ற மணமக்கள் லாரி மோதி பலி

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கனுமனகட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் கரியப்பா மடிவாளா(26). இவருக்கும், கொப்பல் மாவட்டம் காரடகி தாலுகா முஸ்டூரு கிராமத்தை சேர்ந்த கவிதா (19) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, இருவரின் பெற்றோரும் திருமணம் பேசி முடிவு செய்தார்கள். கொப்பல் டவுனில் வருகிற 20-ந் தேதி கூட்டு திருமணம் நடைபெற உள்ளது.
அப்போது கரியப்பாவுக்கும், கவிதாவுக்கும் திருமணம் நடத்த 2 பேரின் பெற்றோரும் முடிவு செய்தார்கள். அதே நேரத்தில் கரியப்பாவின் அண்ணன் ரமேசுக்கும், அதேநாளில் திருமணம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு இன்னும் 2 வாரங்களே இருந்ததால், கரியப்பா, கவிதா ஆகியோர் திருமணத்துக்கு முந்தைய ‘போட்டோ சூட்’ நடத்துவதற்கு முடிவு செய்தார்கள்.

ஏனெனில் கூட்டு திருமணம் என்பதால், அதற்கு முன்பே பல்வேறு இடங்களுக்கு சென்று போட்டோ சூட் நடத்தி விடலாம் என்பது அந்த ஜோடியின் முடிவாகும். இதற்கு 2 பேரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே, உம்னாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விதவிதமாக போஸ் கொடுத்து கரியப்பாவும், கவிதாவும் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
‘போட்டோ சூட்’ எடுத்து முடிந்ததும் வருங்கால மனைவியை, அவரது வீட்டில் கொண்டுபோய் விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கரியப்பா அழைத்து சென்றார். அப்போது சாலையோரம் பழுதாகி ஒரு லாரி நின்று கொண்டிருந்ததால் மோட்டார் சைக்கிளை, நடுரோட்டில் ஓட்டியபடி கரியப்பா வந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி, எதிர்பாராத விதமாக கரியப்பாவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கரியப்பாவும், கவிதாவும் தூக்கி வீசப்பட்டனர். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே பலியானார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் கரியப்பா இறந்து விட்டார். இதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த கங்காவதி புறநகர் போலீசார் விரைந்து வந்து கரியப்பா மற்றும் கவிதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
தற்போது அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

error: Content is protected !!