Skip to content

மன கோட்டை மண் கோட்டையாகும்-விஜயை சீண்டிய வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். “கலைத்துறையில் இருந்து வந்த அந்த சகோதரர் ஆகாயத்தில் மனக்கோட்டை கட்டுகிறார். காகிதக் கப்பலில் கடலை கடக்க முயல்கிறார். அது வெறும் மண்கோட்டையாகத்தான் போகும். அவரின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நனவாகாது” என்று வைகோ தெரிவித்தார். கரூர் ஸ்டாம்பேட் சம்பவத்தில் 41 உயிரிழப்பு ஏற்பட்டும் விஜய் உடனடியாக அனுதாபம் தெரிவிக்கவில்லை என்றும், பொறுப்புணர்ச்சி இல்லாமல் இரவோடிரவாக சென்னை சென்றுவிட்டார் என்றும் வைகோ குற்றம் சாட்டினார்.

விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை “சினிமா டயலாக்” என்று கிண்டல் செய்த வைகோ, “அவர் எங்கு வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம். என்ன கருத்துகள் சொல்கிறார் என்பதை கவனித்துப் பார்ப்போம்” என்று கூறினார். கரூர் சம்பவத்திற்கு 40 நாட்களுக்குப் பிறகு இறந்தவர்களின் குடும்பங்களை அழைத்து துக்கம் விசாரித்ததை “விசித்திரமான முறை” என்று வைகோ விமர்சித்தார். விஜய்யின் அரசியல் பயணத்தின் முதல் அடியே பிழை என்றும் அவர் தெரிவித்தார்.உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வைகோ கடுமையாகச் சாடினார்.

“அமித் ஷா கர்வத்தோடும் அகந்தையோடும் திமுகவை துடைத்தெறிவோம் என்று பேசுகிறார். அவரைவிட 1000 மடங்கு பலம் கொண்டவர்களால்கூட திமுகவை அசைக்க முடியவில்லை. ரத்தம் சிந்தி, தியாகத்தால் வளர்ந்த இயக்கம் திமுக. இது எஃகு கோட்டை” என்று வைகோ பெருமிதத்துடன் கூறினார். அமித் ஷா தனது நாக்கை அடக்கிப் பேச வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

மதிமுக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு கோரிக்கையுடன் ஜனவரி 2-ஆம் தேதி திருச்சி-மதுரை சமத்துவ நடைபயணம் தொடங்க உள்ளதாகவும் வைகோ அறிவித்தார். திமுகவின் வலிமையையும், எதிரணியின் தோல்வியையும் வலியுறுத்திய அவரது பேச்சு, 2026 தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணியின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகை குறித்த வைகோவின் கடுமையான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!