Skip to content

டிச.,14 முதல் பாமக விருப்ப மனு விநியோகம்

சட்டசபைத் தேர்தலில் போட்டியிட பாமக தரப்பில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். டிசம்பர் 20ம் தேதி வரை விருப்ப மனுக்களை பாமகவினர் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய அன்புமணி, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பனையூர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே பல்வேறு கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்துவிட்ட நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவு எடுக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருக்கிறது. ஆனால் பாமகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில்

இருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வரும் சூழலில், பாமக யாருக்கு எந்த போட்டி நடந்து வருகிறது. தேர்தல் ஆணையம் தரப்பில் அன்புமணி தரப்பு பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும் சூழலில், கடைசி நேரத்தில் மாம்பழ சின்னம் முடக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அன்புமணி தரப்பு திமுகவே முதன்மை எதிரி என்று அறிவித்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அன்புமணியை தொடர்ந்து, அவர் மனைவி செளமியா அன்புமணியும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே அன்புமணி தரப்பில் பாஜக – அதிமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கிட்டத்தட்ட இந்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட சூழலில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20 வரை விநியோகிக்கப்படும் என்று அன்புமணி அறிவித்துள்ளார்.

பூர்த்தி செய்த இந்த விண்ணப்பங்களை பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார். புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் பாமக போட்டியிட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக தரப்பில் டிசம்பர் 15ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!