அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, பிரசித்தி பெற்ற அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், ஆலயம் உள்ளது. கோவிலின் சிறப்பு மரகத லிங்கத்திற்கு நடத்தப்படும் வழிபாடு ஆகும்.
நேற்று இரவு பிரதோஷத்தை கோவில் பூசாரி கலியபெருமாள் சிறப்பாக நடத்தினார். மரகதலிங்கத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகாதீபாரதனை மற்றும் ஆராதனை நடைபெற்றதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இரவு கோவில் பூசாரி கலியபெருமாள், கோவிலின் கதவை பூட்டிவிட்டு, கோவி

லின் முன்பு உள்ள மண்டபத்தில் படுத்து உறங்கி உள்ளார். கோவிலின் சாவியை தனது தலைமாட்டில் வைத்து தூங்கிய கலியபெருமாள் காலையில் எழுந்த பொழுது தலைமாட்டில் இருந்த சாவியை காணவில்லை. கோவில் உள்ளே சென்று பார்த்தபோது பூட்டுகள் திறக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட மரகதிலிங்கம் இல்லாதது கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தார். கோவில் பூசாரி கலியபெருமாள் கோவிலை சுற்றி மரகத லிங்கத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து கிராமத்து பொதுமக்களிடம் தெரிவித்தார். ஜெயங்கொண்டம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவிச்சக்கரவர்த்தி தலைமையில் போலிசார் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று
விசாரணை செய்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அரியலூரில் இருந்து தடய அறிவியல் துறை நிபுணர்களும், மோப்பநாய் பிரிவினரும் வரவழைக்கப்பட்டனர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
500 ஆண்டுகள் பழமையான கோவிலில் இருந்த பல கோடி மதிப்பிலான மரகதலிங்கம் திருடு போன சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிரதோஷத்தில் வழிபாடு செய்த மரகதலிங்கம் இன்று காலை மாயமாகி விட்டது, அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

