Skip to content

கரூர் மாவட்டத்தில் 20 இடத்தில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு பணி

கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நீர்நில பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வனத்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 10 பேர் இந்த பணியில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் காப்புக்காடுகள் மற்றும் காப்புக்காடுகளுக்கு வெளியிலும் ஏராளமான ஈரநிலங்கள் உள்ளன. இதில் நீர்நிலைகள், தடுப்பணைகள், ஏரிகள், குளங்கள்

மற்றும் குட்டைகள் அடங்கும். இவ்வகை ஈரநிலங்களில் பல்வேறு பறவை இனங்கள் தங்கியிருப்பதோடு, பருவகாலங்களில் இடம்பெயர்ந்து வருவதும் வழக்கமாக உள்ளது. அரிய மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்கள் கண்டறியப்படும் போது, அவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது அவசியமாகிறது.

இதன் அடிப்படையில், நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் வனத்துறையின் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக ஈரநில பகுதிகளில்

கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இரண்டாம் கட்டமாக நிலப்பரப்புகளில் கணக்கெடுப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கரூர் மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கரூர் கோட்ட வனத்துறையின் ஒருங்கிணைப்பில், வனச்சரகர் அறிவழகன் தலைமையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆசிரியர்கள் ஜெரால்டு, மனோகர், தன்னார்வ அமைப்பினர், வேளாண் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 10 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

காப்புக்காடுகளுக்கு வெளியே உள்ள காவிரி, அமராவதி நதிகள் மற்றும் மாயனூர், வாங்கல், வீரராக்கியம், பஞ்சப்பட்டி, சின்னசேங்கல், வெள்ளியனை உள்ளிட்ட 20 ஈரநில பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, மாயனூர் கட்டளை மேட்டு நீர்ப்பிடிப்பு பகுதியில் நடைபெற்ற கணக்கெடுப்பின் போது, 30 வகையான பறவை இனங்களும், 300-க்கும் மேற்பட்ட பறவைகளும் அடையாளம் காணப்பட்டன. இந்த கணக்கெடுப்பு மூலம் கரூர் மாவட்டத்தின் ஈரநில உயிரியல் வளம் குறித்த முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!