கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஏராளமான வாத்து, கோழி மற்றும் காடை பண்ணைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்தப் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான பறவைகள் அடுத்தடுத்து திடீரென செத்து விழுந்தன. இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை நடத்திய ஆய்வில், அந்தப் பறவைகளுக்கு ‘எச்5என்1’ (H5N1) வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
தற்போது ஆலப்புழா மாவட்டத்தின் அம்பலப்புழா மற்றும் கருவாற்றா ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் நோய் பாதிப்பு வேகமாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளின் இறைச்சி மற்றும் முட்டைகளை மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்ட பண்ணைகளில் உள்ள மற்ற பறவைகளை அழிக்கும் பணிகளும், கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களுக்குப் பறவைகள் கொண்டு செல்லப்படுவதைக் கண்காணிக்கச் சோதனைச் சாவடிகளிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

