Skip to content

ஈரானில் உள்நாட்டுப் போர் பதற்றம்: போராட்டக்காரர்கள் 51 பேர் சுட்டுக்கொலை

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர். அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வரும் போராட்டக்காரர்கள், சில இடங்களில் அரசு கட்டிடங்களுக்குத் தீ வைக்கும் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மக்களின் இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஈரான் அரசு ராணுவத்தையும், பாதுகாப்புப் படைகளையும் களமிறக்கியுள்ளது. போராட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 குழந்தைகளும், 21 பாதுகாப்புப் படை வீரர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த இதுவரை சுமார் 2,300 பேரை ஈரான் அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு கடுமையான ஒடுக்குமுறைகளைக் கையாண்டு வருவது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!