உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 15) கோலாகலமாகத் தொடங்குகிறது. நாளை காலை 7 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க சுமார் 3,000 காளைகளும், 1,800 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான டோக்கன்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுள்ளன. போட்டியையொட்டி வாடிவாசல், காளைகள் வெளியேறும் பகுதி, பார்வையாளர்கள் மாடம் மற்றும் மருத்துவப் பரிசோதனை மையங்கள் என அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து போர்க்கால அடிப்படையில் செய்து முடித்துள்ளன.
பாதுகாப்புப் பணியில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பார்வையாளர்களின் வசதிக்காக திருப்பரங்குன்றம் சாலையின் இருபுறமும் 8 அடி உயரத்திலான இரண்டு அடுக்குத் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், போட்டியின் நேரலை விவரங்களை அறிய எல்.இ.டி திரைகளும் நிறுவப்பட்டுள்ளன. சிறப்பாகக் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத சிறந்த காளைகளுக்கும் கார் மற்றும் டிராக்டர்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் (ஜனவரி 16) பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தொடங்கி வைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

