கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணித்து வரும் நிலையில், சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனர்.
முதல் விசாரணை ஜனவரி 12-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அப்போது 7 மணி நேரம் நீடித்த விசாரணையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இரண்டாவது விசாரணை ஜனவரி 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில் முக்கிய கேள்விகளாக, “கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா?”, “தண்ணீர் பாட்டில்கள் வீசியபோது நெரிசலை கவனிக்கவில்லையா?”, “வாகனத்தின் மேலிருந்து கீழே நிலைமை மோசமாக இருந்தது தெரியவில்லையா?” என்று சிபிஐ அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
மேலும், “கூட்ட நெரிசலுக்கு இடையே பரப்புரை வாகனம் முன்னேறியது ஏன்?”, “பிரபல நடிகரும் கட்சித் தலைவருமான உங்களுக்கு எவ்வளவு கூட்டம் கூடும் என தெரியாதா?”, “7 மணி நேரம் தாமதமாக வர காரணம் என்ன?” என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. சாலைகளில் வளைவுகள் இருந்ததால் தாமதம் என்றால் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் சிபிஐ வலியுறுத்தியது.
விஜய் அளித்த விளக்கத்தில், “வாகனம் எங்கு செல்ல வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றினோம்” என்றும், “கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை தவறியது” என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
சிபிஐ விசாரணை முழுமையடைந்து வரும் நிலையில், பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விஜய்யின் பெயர் சேர்க்கப்படும் வாய்ப்பு அதிகம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

