Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீனாட்சி கோவிலில் அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆய்வு

த.வெ.க. அரசில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் ரமேஷ், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் அதிரடி ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் 29-ந்தேதி திருச்செந்தூர் கோவிலில் மாறுவேடத்தில் சென்று ஆய்வு நடத்தி, தரிசனத்திற்கு அங்குள்ள அர்ச்சகர்கள் பணம் வாங்கியதை கண்டுபிடித்தார். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த வாரம் பழனி முருகன் கோவிலில் ஆய்வு நடத்தினார். இதற்கிடையே உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கோவிலின் நான்கு திசையில் இருக்கக்கூடிய கோபுரங்கள் மற்றும் கோவிலுக்குள் இருக்கும் பிற பகுதிகளிலும் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் கோவில் அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழா குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று இரவு மதுரைக்கு வந்தார். மதுரை மேற்கு கோபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் இன்று காலை கோவிலுக்குள் ஆய்வு மற்றும் ஆலோசனை நடத்துவதற்காக புறப்பட்டார். அவருக்கு மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா சார்பில் அவரது ஆதரவாளர்கள் மீனாட்சி அம்மன் புகைப்படம் மற்றும் வேல் உள்ளிட்டவற்றை நினைவுப் பரிசாக வழங்கினர்.

தொடர்ந்து மேற்கு கோபுரம் வழியாக வடக்கு கோபுரம் மற்றும் கிழக்கு கோபுரத்தை கடந்து அம்மன் சன்னதிக்கு வருகை தந்தார். முன்னதாக அங்குள்ள செல்போன் பாதுகாப்பு மையத்தில் தனது செல்போனை ஒப்படைத்துவிட்டு கோவிலுக்குள் சென்றார். வடக்கு சித்திரை வீதி வழியாக சென்று அங்குள்ள மதுரை வீரன் சாமியை வணங்கினார். அப்போது சிவ பக்தர்கள் அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் அவருக்கு விபூதி வழங்கி தங்களது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதத்தையும் தெரிவித்தனர். பின்னர் ஒவ்வொரு கோபுர நுழைவு வாயில் வழியாக சென்ற அவர் ஆங்காங்கே நடைபெற வேண்டிய பணிகள், குறிப்பாக கிழக்கு கோபுரத்திற்கு அடுத்து இருக்கக்கூடிய மாநகராட்சி தண்ணீர் தொட்டி பயனற்ற நிலையில் இருப்பதை பார்த்த அவர் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டார்.

மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரத்தை ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ், அதில் உப்பின் தன்மை எந்த அளவுக்கு உள்ளது என்று அதன் பராமரிப்பாளரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் கருவி மூலம் ஆய்வு செய்தபோது, தரமற்ற நிலையில் இருப்பதை உறுதி செய்த அவர் ஊழியரை கடுமையாக கண்டித்தார். தரமான தண்ணீர் நிரப்புவதற்கான பணிகளை ஏற்பாடு செய்யுங்கள் என கோவில் இணை ஆணையரிடம் தெரிவித்தார். அதேபோல் பிரசாதம் தயாரிக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ், பின்னர் புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்று ஆண்டுக்கு எத்தனை புத்தகங்கள் விற்பனையாகின்றன என்று கேட்டார். அதற்கு சரியான பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அமைச்சர் ரமேஷ், முறையாக கணினியில் பதிவு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து அம்மன் சன்னதி, சுவாமி சன்னதியில் நீண்ட வரிசையில் பக்தர்களோடு பக்தராக நின்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக தனது காலணியை தானே எடுத்து காலணி பாதுகாப்பு அறையில் செலுத்தினார். அதற்கான டோக்கனை கேட்டபோது, தொலைந்துவிட்டதாக பணியில் இருந்தவர்கள் கூறியதை ஏற்க மறுத்த அமைச்சர் ரமேஷ் மாற்று ஏற்பாடு செய்ய அறிவுரை வழங்கினார். மீனாட்சி அம்மன் கோவிலில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அங்குலம் அங்குலமாக ஆய்வு நடத்திய அமைச்சர் ரமேஷின் பல்வேறு அதிரடியான கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திக்குமுக்காடிப் போனார்கள்.

error: Content is protected !!