Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்த பதிலை கேட்ட பிறகு… எனது ரத்தம் கொதிக்கிறது- துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவது குறித்து மாநிலங்களவையில் எம்.பி அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சர் பூஷன் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். இந்த பதிலை கேட்ட பிறகு எனக்கு உறக்கமே வரவில்லை. எனது ரத்தம் கொதிக்கிறது.

மத்திய அமைச்சருக்கு காவிரி விவகாரம் குறித்து, அவருக்கு ஆலோசனை சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள். அவரது விளக்கத்தில், அணை கட்டுவது தொடர்பாக 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகியவற்றியின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இது மிகவும் கண்டனத்திற்குரியது. 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பில், கர்நாடக அரசு முன்வைத்துள்ள மேகதாது திட்டம், தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை திட்டத்தையும் வெளிப்படையாக மீறுவதாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், கர்நாடக அரசு மற்ற மாநிலங்களுக்கான நீர் விநியோகத்தை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டிருந்தது.

பெரிய பதவியில் இருக்கும் அமைச்சர் தவறான செய்தியை வெளியிடுவது வருத்தத்திற்குரிய விஷயமாகும். கர்நாடகத்தில் எந்த ஆட்சி வந்தாலும், அவர்கள் காவிரி விவகாரத்தில் ஒன்றாக இருக்கிறார்கள். மத்திய அரசுதான் இதை எதிர்க்க வேண்டும்” என்று துரைமுருகன் தெரிவித்தார்.

தொடர்ந்து, அவரிடம் முதலமைச்சர் விஜய் மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு, பெங்களூரு போவதற்கு பதிலாக டெல்லி போகவேண்டும். முதலமைச்சர் விஜய், மத்திய அரசுடன் ஒத்துப் போவதாக கூறுகிறார். டெல்லி சென்று பிரதமரிடம் இதுகுறித்து பேசினால் என்ன? தமிழ்நாடு இப்போது பாலைவனமாக மாறிவருகிறது” என்று துரைமுருகன் கூறினார்.

மேலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது குறித்த கேள்விக்கு, “இதை விட மோசமான நிலை என்பது கிடையாது. இதற்காக தமிழர்கள் தலைகுனிய வேண்டும். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே கருப்பு அத்தியாயம் இது. மத்திய அரசு இந்த நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக வேறு ஒரு பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது. இதை தற்போதைய தமிழ்நாடு அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும்” என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!