கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு : செல்ஃபோன் உரையாடல் தடையவியல் நிபுணர்களின் முழு ஆய்வறிக்கை – மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் !!!
கோவை, பீளமேடு சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த சகோதரர்கள் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் அவர்களது உறவினர் மதுரையை சேர்ந்த தவசி

ஆகியோர் கோவை துடியலூர் அருகே கீரணத்தம் பகுதியில் பதுங்கி இருந்த போது போலீசாரால் காலில் சுட்டு பிடிக்கப்பட்டனர். பின்னர் மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கருப்பசாமி மற்றும் தவசி ஆகியோருக்கு போலீசார் சுடப்பட்டதால் ஏற்பட்ட காயம் குணம் அடைந்த நிலையில் காளீஸ்வரன் மற்றும் இன்னும் குணம் அடையாத நிலையில் மத்திய சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த வழக்கு விசாரணை கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி சிந்து முன்னிலையில் கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட சூழலில் வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 9 ம் தேதி 200 பக்கத்திற்கு போலீசாரால் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதன் இடையே கைது செய்யப்பட்டு உள்ள மூவரின் செல்ஃபோன் உரையாடல் தடையவியல் நிபுணர்களின் முழு ஆய்வறிக்கை ஆகியவை அடங்கிய 270 பக்கத்திற்கான கூடுதல் குற்றப்பத்திரிகையை பீளமேடு காவல் நிலைய போலீசார் மகளிர் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முன்னிலையில் இன்று தாக்கல் செய்தனர்.
இதற்காக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள குற்றவாளிகளான கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் காலில் ஏற்பட்ட காயத்துடன் நடக்க இயலாத நிலையில் மற்ற இரு குற்றவாளிகள் மூலம் காளீஸ்வரன் கை தாங்கலாக நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டான்.
முன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 21 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்து தீர்ப்பளித்துடன் அன்றைய தினம் மூவரையும் ஆஜர்ப்படுத்துமாறு போலீசாருக்கு அறிவுறுத்தினார்..

