Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மருத்துவமனையில் சிகரெட் பிடித்த கைதி எம்.எல்.ஏ: பீகாரில் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக ஆர்ஜேடி கடும் தாக்குதல்

பீகார் மாநிலம் மோகாமா தொகுதி ஐக்கிய ஜனதா தள (JDU) எம்.எல்.ஏ.வான அனந்த் சிங், ‘சோட்டே சர்க்கார்’ என்று அழைக்கப்படுபவர். இவர் மீது சுமார் 28 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட இவர், பின்னர் 2024-இல் பாட்னா உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், ஒரு கொலை வழக்கு தொடர்பாக 2025 நவம்பரில் மீண்டும் கைது செய்யப்பட்டு பியூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தபடியே 2025 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அனந்த் சிங், ஆர்ஜேடி வேட்பாளரை விட 28,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.இந்நிலையில், நேற்று உடல் பரிசோதனைக்காக பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழக (IGIMS) மருத்துவமனைக்கு அனந்த் சிங் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அப்போது மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே அவர் மிகச் சாதாரணமாகச் சிகரெட் பிடித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, “இதெல்லாம் சகஜம்தான்” என்று மிக அலட்சியமாகப் பதிலளித்தார்.

இந்தச் சம்பவம் நிதிஷ் குமார் தலைமையிலான அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள எதிர்க்கட்சியான ஆர்ஜேடி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குச் சிறையிலும் ‘விஐபி கலாசாரம்’ தொடர்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பாரதி, அனந்த் சிங்கை ‘அரசின் செல்லப்பிள்ளை வில்லன்’ என்று விமர்சித்துள்ளார். எனினும், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் அசோக் சவுத்ரி இது குறித்துக் கேட்டபோது, அந்த வீடியோவை தான் இன்னும் பார்க்கவில்லை என்று கூறி மழுப்பலாகப் பதிலளித்தார்.

மருத்துவமனை போன்ற பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கைதியாக இருக்கும் எம்.எல்.ஏ-வின் இத்தகைய செயல் பீகாரில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

error: Content is protected !!