சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் பகுதியில் கார் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகத்தில் சென்ற அந்த கார், சாலை தடுப்புச்சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த கல்லூரி மாணவர்களான தரணி, நிஷாந்த் மற்றும் விநாயகமூர்த்தி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்த மற்ற மூன்று மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும், சுற்றுலா பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

