Skip to content

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் சாவு: கடலூரில் உறவினர்கள் மறியல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகப்ப சமுத்திரத்தைச் சேர்ந்த தேவ ஜெசிப்பிரியா (22), விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் மேல்பாதி பகுதியைச் சேர்ந்த வசந்தராஜ் (25) என்பவரைக் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தனியாக வசித்து வந்த இந்தத் தம்பதியிடையே, திருமணமான நாள் முதலே நகை மற்றும் பணம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தேவ ஜெசிப்பிரியா வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து வளவனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து வசந்தராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதங்களிலேயே பெண் உயிரிழந்துள்ளதால், டி.எஸ்.பி சரவணன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தேவ ஜெசிப்பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த புதுநகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தினர்.

error: Content is protected !!