உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள், தடையை மீறி தனியார் நர்சிங் ஹோம்களில் பணிபுரிவதாகவும், அரசு நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றுவதாகவும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அரசு போதிய நிதி அளித்தும் மருத்துவர்களின் இந்த சுயநலச் செயலால் அரசு மருத்துவமனை அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறி, உயர் நீதிமன்றம் இதற்கு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் டாக்டர் சந்தோஷ்குமார் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஜாய்மால்யாபாக்சி அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தது. “அரசு டாக்டர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது என்ற நோக்கம் மிகவும் நல்லது; இது பொதுநலன் சார்ந்தது” என்று நீதிபதி நாகரத்னா திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். இதனையடுத்து மனுதாரர் தன் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
