Skip to content

கொளத்தூரில் நவீன டயாலிசிஸ் மையம் மற்றும் ஏரிக்கரை பூங்கா: முதலமைச்சர் திறந்து வைத்தார்

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

கொளத்தூர் அகரம் பகுதியில் ₹11.74 கோடி செலவில் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த மையத்தில் 15 படுக்கை வசதிகளுடன் கூடிய டயாலிசிஸ் பிரிவு, பிஸியோதெரபி, செயற்கை மூட்டு மையம் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதே வளாகத்தில் 6 புதிய நியாய விலைக் கடைகளையும் திறந்து வைத்த அவர், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

ரெட்டேரி சந்திப்பு அருகே ₹4.98 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள ஏரிக்கரை பூங்காவை முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். இந்தப் பூங்காவில் நடைபாதை, இசைப் பூங்கா, குழந்தைகள் விளையாடும் இடம் மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை பகுதியில் ₹39 கோடி மதிப்பீட்டில், 310 திறந்தவெளி மின்மாற்றிகளைப் பாதுகாப்பான வளைதள மின்மாற்றிகளாக மாற்றும் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் அப்பகுதியில் மின் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு, சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்படும்.

தொடர்ந்து, ஜவகர் நகரில் உள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 248 பயனாளிகளுக்குக் கல்வி உதவித்தொகை, மடிக்கணினிகள், திருமண உதவித்தொகை மற்றும் மாவு அரைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!