திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டாரத்தில் உள்ள சிறப்புநிலை நகராட்சியான திருவேற்காட்டில், லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு அலுவலராகப் பணியாற்றி வருபவர் சாந்தி. இப்பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் தனது மனைப் பிரிவிற்குஅனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த அனுமதி வழங்க வேண்டும் என்றால் தனக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும் என்று சாந்தி நிபந்தனை விதித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயலட்சுமி, இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் அளித்தார்.
அதிகாரிகளின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயலட்சுமி இன்று நகராட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று சாந்தியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், சாந்தியை கையும் களவுமாகப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

