Skip to content

சிறுமிகளிடம் அத்துமீறல்… சிலம்ப ஆசிரியர் போக்சோவில் கைது

சென்னை நீலாங்கரையில் சிலம்ப ஆசிரியரே மாணவிகளிடம் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கலைகளைக் கற்றுத் தரும் குருவின் இடத்திலிருந்து கொண்டு, பாதுகாப்பாகத் தன்னிடம் வந்த சிறுமிகளுக்குத் துரோகம் செய்த அந்த ஆசிரியர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீலாங்கரை பகுதியில் சிலம்பப் பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த திருநாவுக்கரசு (36) என்பவர், அங்கு பயிற்சிக்கு வந்த சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாகத் தன்னிடம் சிலம்பம் கற்க வரும் சிறுமிகளிடம் திருநாவுக்கரசு தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பயத்தின் காரணமாகச் சிறுமிகள் இதனை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தனது பெற்றோரிடம் தைரியமாகத் தகவலைத் தெரிவிக்க, அவர்கள் உடனடியாக நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், திருநாவுக்கரசு மீதான குற்றச்சாட்டுகள் முதற்கட்டமாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இன்று கைது செய்தனர்.

திருநாவுக்கரசு கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும், அவரிடம் பயிற்சிக்கு வந்த மேலும் சில சிறுமிகளின் பெற்றோர்களும் அவர் மீது புகார் அளிக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் இந்த வழக்கின் தீவிரம் அதிகரித்துள்ளது.

அவர் சிலம்பப் பயிற்சி அளித்த இடம் மற்றும் அவரது இதர பின்னணிகள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அந்தப் பயிற்சிப் பள்ளிக்குச் சீல் வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருநாவுக்கரசு, தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!