காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்த தவெக நிர்வாகியை, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அறிகுறி தெரியவில்லை என
மருத்துவர்கள் அலைகழித்ததால் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர்
குற்றம்சாட்டியுள்ளனர்.
தனியார் வங்கி ஊழியரான 38 வயதான ஜெகன்ராஜ் திருமணமாகி மனைவி இரு குழந்தைகள் இருக்கும் நிலையில், இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரை கட்டுவிரியன் பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக டூவீலரில் வைத்து அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற உறவினர்கள், ஜெகன்ராஜை கடித்த கட்டுவிரியன் பாம்பின் படத்தையும் மருத்துவர்களிடம் காண்பித்துள்ளனர்.
ஆனால், அவருக்கு பாம்பு கடித்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை என கூறி சுமார் ஒரு மணி நேரமாக சிகிச்சையளிக்காமல் தாமதித்ததாக கூறப்படுகிறது. அதேபோல், அவசர காலத்திற்கு வைக்கப்பட்ட ஆக்ஸிஜன் தீர்ந்த பிறகு மாற்று சிலிண்டர் வைக்க அரை மணி நேரத்திற்கு மேல் காலதாமதம் செய்ததாகவு ஜெகன்ராஜ் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இனிவரும் காலங்களில் இதுபோன்று அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் எந்தவொரு உயிரும் பிரியக்கூடாது என்றும், தவறிழைத்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விளக்கமளித்துள்ள ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர் ஜெயபாரதி, தூங்கி கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளதால் எப்போது கடித்தது என அவர்களுக்கு தெரியவில்லை எனவும், வீட்டிலேயே கயிறு கட்டி, ரத்தத்தை வெளியேற்றி காலதாமதம் செய்துள்ளனர் என விளக்கம் அளித்துள்ளனர்.
