Skip to content

மகனை முத்தமிடுவதில் தகராறு: மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் கைது

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம் என்று கூறிய மனைவியை கணவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு பகுதியைச் சேர்ந்த அவினாஷ், தீயணைப்புத் துறையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கோவையை சேர்ந்த தீபிகா (28). இவர்களுக்கு 12 வயதில் ஐவின் என்ற மகன் உள்ளார். பெங்களூருவில் வசித்து வந்த இந்தத் தம்பதியினர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மண்ணார்காடு பகுதிக்குக் குடிபெயர்ந்தனர்.

சம்பவத்தன்று காலையில் எழுந்த அவினாஷ், தனது மகனை முத்தமிட சென்றுள்ளார். அப்போது தீபிகா, பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம் என்று தடுத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவினாஷ், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துத் தீபிகாவைச் சரமாரியாக வெட்டினார்.

தீபிகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டுப் பெருந்தல்மன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி தீபிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த மண்ணார்காடு போலீசார், கையில் அரிவாளுடன் வீட்டிலேயே இருந்த அவினாஷைக் கைது செய்தனர். அவினாஷ் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிகச் சாதாரணமான ஒரு காரணத்திற்காகத் தாயைக் தந்தையே கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!