பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட மாவட்ட கலெக்டர்…
அறிவியல் ப்ராஜெக்ட்டுடன் வந்த மாணவிக்கு பேனா பரிசு வழங்கி பாராட்டு…
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. புதிய வகுப்பறைக்கு செல்லும் மாணவர்கள், தங்களது பழைய நண்பர்களுடன் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். அரியலூர் அருகே உள்ள வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்

பள்ளிக்கு, இன்று காலை அரியலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி சென்று மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட காலை உணவை ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களுடன் ஒன்றாக தரையில் அமர்ந்து, மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட காலை உணவை தானும் சாப்பிட்டார். தன்னைச் சுற்றி அமர்ந்திருந்த மாணவர்களுடன், ஒரு குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, ஜாலியாக பேசிக்கொண்டே உணவு சாப்பிடுவது போல, மாணவ மாணவிகளுடன்

சிரித்து பேசிக் கொண்டே உணவை அருந்தினார். பின்னர் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசால், மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை மற்றும் பாட புத்தகங்களை, மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வழங்கினார். இதனையடுத்து பள்ளிக்கு வெளியில் வந்த பொழுது, மாணவி ஒருவர் தான் செய்திருந்த அறிவியல் ப்ராஜெக்ட்டை தனது தந்தையுடன்

பள்ளிக்கு எடுத்து வந்தார். அந்த மாணவியுடன் உரையாடிய மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, மாணவியின் பெயர் மற்றும் அவர் எடுத்து வந்த அறிவியல் பிராஜெக்ட் குறித்து கேள்விகள் கேட்டார். நன்றாக பதில் அளித்த மாணவிக்கு, தனது காரில் இருந்து புதிய பேனா ஒன்றை எடுத்து வர கூறி, அதை பரிசாக மாணவிக்கு அளித்து பாராட்டினார்.
எந்தவித பாகுபாடும் இன்றி மாணவ, மாணவிகளுடன் ஒன்றாக அமர்ந்து மாவட்ட ஆட்சியர் காலை உணவு அருந்தியது, பள்ளி ஆசிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
