பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று (07-02-2026) மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.
பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பல குழந்தைகளுக்கு அடுத்தடுத்து வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. சில நிமிடங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பள்ளி வளாகத்தில் பெரும் பீதி நிலவியது. பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களை வரவழைத்து, பாதிக்கப்பட்ட 70 மாணவர்களையும் சிகிச்சைக்காக சதர் மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோரின் நிலைமை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஒரு சிறுமியின் உடல்நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளதால், அவருக்குத் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதிய உணவில் பல்லி விழுந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் பலத்த சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தப் பள்ளிக்கு மதிய உணவானது ‘பாரஸ் அக்ரோ’ என்ற தன்னார்வ அமைப்பு மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தகவலறிந்து மருத்துவமனையில் குவிந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் நிலையைக்கண்டு ஆக்ரோஷமடைந்தனர். உணவின் தரத்தைக் கண்காணிக்கத் தவறிய பள்ளி நிர்வாகம் மற்றும் உணவு வழங்கிய தன்னார்வ அமைப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

