Skip to content

முதியவரிடம் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் மோசடி செய்த நபர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் ராமநாதன்(70). இவர் கடந்த 30ம் தேதி மருத்துவகல்லூரி சாலை மூலிகை பண்ணை பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மர்மநபர் ராமநாதனுக்கு உதவுவது போல் நடித்து அவரது ஏடிஎம் கார்டை தான் வைத்துக் கொண்டு போலியாக வேறு ஒரு ஏடிஎம் கார்டை மாற்றி தந்துள்ளார்.

இதை கவனிக்காமல் ராமநாதன் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதற்கிடையில் ராமநாதனின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அவரது கணக்கில் இருந்து அந்த மர்மநபர் ரூ.50 ஆயிரத்தை எடுத்துள்ளார். தொடர்ந்து ராமநாதன் செல்போன் எண்ணுக்கு பணம் எடுக்கப்பட்ட விபரம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமநாதன் இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார்.

இதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) சுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஏடிஎம்-ல் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ராமநாதன் ஏடிஎம்மை கார்டை பயன்படுத்தி பணத்தை மோசடியாக எடுத்தது குளித்தலை பகுதி கீழநங்கவரத்தை சேர்ந்த சுகுமார் என்பவரின் மகன் சரவணக்குமார் (31) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சரவணக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!