Skip to content

ஜோதிடர் பேச்சைக் கேட்டு விபரீதம்: தந்தையை கொன்றதாக தாயை தீர்த்துக்கட்டிய மகள்

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் அனுபவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பலதா (55). இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவர்களது மகள் சுசித்ரா (33) தனது கணவர் சுரேஷுடன் துமகூரு டவுனில் வசித்து வந்தார். சமீபத்தில் சுசித்ரா ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்கச் சென்றபோது, அந்த ஜோதிடர் சுசித்ராவின் தந்தையின் மரணத்திற்கு அவரது தாய் புஷ்பலதா செய்த மாந்திரீக பூஜையே காரணம் எனத் தவறாகக் கூறியுள்ளார்.

இதை அப்படியே நம்பிய சுசித்ரா, தனது தாயின் மீது கடும் ஆத்திரமடைந்து அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். இதற்காகத் தாயின் வீட்டுக்குச் சென்ற சுசித்ரா, ஜோதிடர் சொன்னதைக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், பெற்ற தாய் என்றும் பாராமல் தலையணையால் புஷ்பலதாவின் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து கொலை செய்தார். பின்னர், தனது தாய் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடிய சுசித்ரா, உடலை அவசரம் அவசரமாக இறுதிச்சடங்கு செய்ய முயன்றார்.

இதில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் சுசித்ராவைப் பிடித்து விசாரித்தபோது, ஜோதிடர் சொன்னதை நம்பி தாயை கொன்ற உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுசித்ரா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தவறான தகவலைக் கூறி கொலைக்குத் தூண்டுகோலாக இருந்த அந்த ஜோதிடரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

error: Content is protected !!