ஒரு நிதி நிலை அறிக்கை எப்படி இருக்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கு வந்து பார்க்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று (17.02.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மாண்புமிகு நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சமூகநீதி, கல்வி முன்னேற்றம், பெண்கள் அதிகாரமளித்தல் மூலமாக தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய முழுமையான மக்கள் நல நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி, உயர்கல்விக்கு ரூ.8,505 கோடி என கல்விக்குத் தாராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, மாணவர்களின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் முயற்சியாகும். ‘புதுமைப் பெண்’ திட்டம் மூலம் மாணவியருக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை, காலை உணவுத் திட்டம் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவது ஆகியவை சமூக முன்னேற்றத்தின் அடையாளங்களாகும். ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், குடிநீர், மருத்துவம், போக்குவரத்து, மின்துறை போன்ற அடிப்படை துறைகளுக்கு பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, மாநிலத்தின் சமநிலையான வளர்ச்சியை நோக்கிய தெளிவான பார்வையை வெளிப்படுத்துகிறது.
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனுதவி, பெண்கள் பெயரில் சொத்து பதிவு கட்டணம் குறைப்பு போன்ற அறிவிப்புகள் பெண்களின் பொருளாதார சுயசார்பு நிலையை வலுப்படுத்தும் வரலாற்றுச் செயல்களாகும். செமிகண்டக்டர் மேம்பாட்டு திட்டம், தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்பு உருவாக்கம், சென்னை மெட்ரோ விரிவாக்கம் போன்ற அறிவிப்புகள் தமிழ்நாட்டை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் முயற்சிகளாகும். மொத்தத்தில், இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை ‘அனைவருக்கும் வளர்ச்சி – அனைவருக்கும் நலன்’ என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை நிதிநிலை அறிக்கையாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் முன்னேற்றப் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் இந்த மக்கள் நலன் சார்ந்த நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கின்றேன். வாழ்க தமிழ்! வளம் பெறுக தமிழ்நாடு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

