Skip to content

18 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

குளித்தலை அருகே அய்யர்மலையில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த புகழ்பெற்ற மலை உச்சியில் உள்ள ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பச்சை, சிவப்பு உள்ளிட்ட எட்டு கற்களின் நடுவே ஒன்பதாவது ஆக ரத்தினம் கற்கள் உள்ள மலையில் சுயம்பு லிங்கமாக சுவாமி காட்சி அளிக்கிறார்.

அப்பர், திருவாசகர் ஆகியோரால் தேவாரம் பாடல் பாடப்பட்ட 274 சிவாலயங்களில் 64வது தேவார சிவஸ்தலம், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பெற்றும், சுந்தரருக்கு பொற்கிளி வழங்கி அருள் பாலித்த சிவஸ்தலமாகும். சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமை வாய்ந்த அய்யர்மலை சிவஸ்தலம் ஆனது கடல் மட்டத்திலிருந்து 1171அடி உயரத்தில் 1071 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமைந்துள்ளது.

புகழ்பெற்ற இந்த அய்யர் மலையானது வாட்போக்கி மலை, காகம் பறவாமலை, ரத்தினகிரி மலை, ஐவர்மலை என்றும் சுவாமி மூலவர் வாட்போக்கி நாதர், முடித்தழும்பர், ராஜலிங்கர், மாணிக்க மலையான் என்றும் அழைக்கப்படுகிறார். மலை உச்சியில் அமையப்பெற்ற இந்த சிவ ஸ்தோத்திரம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாலாலயம் செய்யப்பட்டு ரூபாய்கோடி மதிப்பில் கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்றன.

மலை அடிவாரத்தில் உள்ள பரிவார தெய்வ கோவில்களுக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மலை உச்சியில் உள்ள ரெத்தினகிரீஸ்வரர் மற்றும் சுரும்பார் குழலி அம்மாள் கோவில் புனரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்தது அடுத்து இன்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கடந்த 18ஆம் தேதி குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை , வாஸ்து சாந்தி பூஜை, ரக்ஷா பந்தனம், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, நாடி சந்தனம், திரவியாஹூதி, பூர்ணாஹுதி, மகா தீபாராதனை உள்ளிட்ட நான்கு கால யாக கேள்வி பூஜைகளை செய்தனர்.

இன்று காலை 4ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கும்பத்தினை மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரினை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் மூலவர் சுவாமிக்கும் புனித நீரினை ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், சிவபக்தர்கள், பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

error: Content is protected !!