சென்னை : தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பாஜகவின் அரசியலை கடுமையாக விமர்சித்துள்ளார். “பாஜகவின் அரசியலை திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி ஆட்சியைப் பிடிக்க ‘வாசிங் மிசின்’ அரசியலை பயன்படுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டிலும் வாசிங் மிசின் கூட்டணியைதான் அமைத்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.INDIA கூட்டணிக்கு தலைமை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிக்கையில், “தலைவர் கலைஞர் சொன்னது போல, என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்… அதன் அடிப்படையில் நான் இருப்பேன்” என்று தெரிவித்தார். தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அவர், தலைமை பொறுப்பு குறித்து எந்த லட்சியமும் இல்லை என்று வலியுறுத்தினார். திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் பின்பற்றும் மாடலாக மாற்றியுள்ளதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
“திராவிட மாடல் அரசு இந்தியாவின் மற்ற மாநிலங்களால் பின்பற்றப்படும் அளவுக்கு உள்ளது” என்று கூறிய அவர், பெரிய திட்டப் பணிகளை தமிழ்நாடு முழுவதும் திறந்து வைத்து வருவதாகவும் குறிப்பிட்டார். கல்வியை கடவுளாக போற்றி, மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதே தங்கள் நோக்கம் என்றும் வலியுறுத்தினார்.
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ குறித்து பேசிய முதலமைச்சர், “அமலாக்கத்துறை இதுவரை பதிவு செய்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் எத்தனை வழக்குகள் முழுமையாக விசாரணை செய்து முடிக்கப்பட்டுள்ளன? அவர்களின் உண்மையான நோக்கம் என்ன? ஊழல் குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டவர்கள் இன்று யாருடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். “அமலாக்கத்துறை, சிபிஐயை அழைத்து வந்தாலும் ஒரு கை பார்ப்போம்” என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சென்னை கொளத்தூரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர், அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டினார். “கோடு போட சொன்னால் ரோடு போடுவார்” என்று குறிப்பிட்ட அவர், “நினைத்ததைவிட பல மடங்கு சிறப்பாக கல்லூரியை அமைத்து கொடுத்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு” என்று புகழ்ந்தார். கல்வியை முன்னிலைப்படுத்தும் திராவிட மாடல் ஆட்சியின் வெற்றியை இது பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

