தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றார். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூரில் 100 படுக்கைகளுடன் நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனை கட்ட உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சோழிங்கநல்லூரில் 66.50 கோடி மதிப்பீட்டில் 1,01,773 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன், 100 படுக்கை வசதிகளுடன் புறநகர் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் புற நோயாளிகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளும், முதல் தளத்தில் மகப்பேறு சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளும் இரண்டாம் தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு மற்றும் ஆண்களுக்கான பொது மருத்துவம் ஆகிய பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்றாம் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி, ஆய்வகம் மற்றும் பெண்களுக்கான பொது மருத்துவம் ஆகிய பிரிவுகளும், நான்காம் தளத்தில் தீக்காய சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளும், ஐந்தாம் தளத்தில் நீரிழிவு சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளும் என நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனையாக இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (25.2.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் சென்னை சோழிங்கநல்லுரில் 66.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தளங்களுடன், 100 படுக்கைகள், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ள புறநகர் மருத்துவமனை கட்டத்தை திறந்து வைத்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம் மேடவாக்கம் ஊராட்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 1.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மகேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் மாலதி ஹெலன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண்தம்புராஜ், நிலைக்குழுத் தலைவர் விசுவநாதன், மண்டலக்குழுத் தலைவர்கள் ரவிச்சந்திரன், மதியழகன், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி இராஜகுமாரி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் ஹரிஹரன், அரவிந்த் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

